Monday, November 28, 2011

டாக்டர் என்ன கடவுளா?

நீண்ட நாளாகிறது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றி. நீண்ட நாளாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்த டாக்டர்கள் உடனான எனது அனுபவத்தை இதோ  இங்கே தருகிறேன்.

பல முறை டாக்டர்கள் தங்களை கடவுளுக்கு மேலாகவே நினைத்து கொள்கின்றனர். எனது அனுபவத்தில் பல டாக்டர்கள் ஆன்மீகவாதிகளாக இருக்க பார்த்திருக்கிறேன். அதில் சில தீவிர பக்தியாளர்களும் உண்டு. அப்படி பட்ட  டாக்டரிடம் நான் பட்ட பாடு ......

எனது தாத்தா அவரது கடைசி காலத்தில் நினைவு இழந்த நிலையில் ஈரோட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு கூட்டி சென்று பரிசோதனையை ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் பொறுமையாக இருந்த நான் உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். அங்கே டாக்டர்கள் எவரும் இல்லை. இரண்டு நர்சுகள் தான் தாத்தாவின் உடல் நிலையை பரிசோதித்து கொண்டு இருந்தார்கள். "டாக்டர் எப்ப வருவார்" என்று கேட்டேன். அவர் மாலை நேர பூஜையில் இருக்கிறார், வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்றனர்.  என்னடா இவர் சிறப்பு பூஜை நடத்துகிறாரா இல்லை மருத்துவமனை நடத்துகிறாரா என்கின்ற அளவுக்கு ஒரு வெறுப்பு. என்ன செய்வது, தாத்தா ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்றவர் என்பதால் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. 

இரண்டு மணி நேரம் ஆன பின் டாக்டர் தனது பரிவாரங்களுடன் ICU  அறைக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து நான் உள்ளே அழைக்கப்பட்டேன். அங்கே இருந்த டாக்டர் "உடல் நிலை கொஞ்சம் சீரியஸ் தான். என்னால் முடிந்த அளவு சிகிச்சை தருகிறேன்" என்றார். கேட்ட கேள்விகளுக்கு தொய்வில்லாமல் பதில் அளித்தார். அவரது அணுகு முறையும் பதில் அளித்த விதமும் எனது கோபத்தை தற்காலிகமாக மறக்கடிக்க செய்தது. 

நான்கு நாட்கள் கழித்து எனது தாத்தாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வீட்டிற்கே அவரை அழைத்து வந்து விட்டோம். அடுத்த நாள் அவர் இறந்து விட்ட நிலையில் இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டி மறுபடியும் அந்த மருத்துவமனை செல்ல வேண்டி வந்தது. சரியாக எட்டு மணிக்கு அங்கு சென்று விட்டோம். அனால் நமது ஆன்மிக செம்மல் அப்பொழுது தான் இறைப்பணி ஆற்ற சென்று விட்டார் என அங்கே  சொல்ல, நொந்து போய்விட்டோம். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் போராடி பார்த்தும் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து தான் சாமி தரிசனம் காண முடிந்தது.

மருத்துவரின் ஆன்மீக பற்றை குறை சொல்லவில்லை, அனால் அவசர சிகிச்சை பிரிவு என்று ஒரு பிரிவை வைத்து கொண்டு இந்த அலட்சியம் ஏன் ? ஒரு மாற்று மருத்துவரை இருக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டியது தானே? இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கும் ஒரு மாற்று மருத்துவர் இருந்திருந்தால் எவ்வளுவு நன்றாக இருந்திருக்கும். 

நோயாளிகளுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என உணர்ந்தால் கடவுள் அருள் நிச்சயம் அவருக்கு உண்டு. தினமும் இரண்டு மணி நேரம் அவருக்கும் மிச்சம், காத்திருக்கும் நமக்கும் மிச்சம்.

மேலும் சில அனுபவங்களும் உண்டு. அது அடுத்த பதிவில்